Filed Under:  Uncategorized

அம்பாசமுத்திரம் அம்பானி

27th July 2010   ·   0 Comments

அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கருணாஸுக்கு எப்படியாவது அம்பானி ரேஞ்சுக்கு பணக்காரனாக வேண்டும் என்பது வெறி. இதற்காக பேப்பர் போடுவதிலிருந்து, சாவு வீட்டுக்கு பூ சப்ளை பண்ணுவது வரை அத்தனை வேலையும் செய்கிறார். தான் சென்னை வந்த புதிதில் தனக்கு வேலை வாங்கிக் கொடுத்த கோட்டா சீனிவாசராவ் மீது அன்பும், நம்பிக்கையும் அதிகம். அவர் புதிதாக கட்டிவரும் வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தனக்கும் ஒரு கடை வேண்டும் என்று கேட்டு தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் சிறுக சிறுக அவரிடம் 35 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வைக்கிறார். இன்னும் 10 லட்சம் கொடுத்தால் கடை கிடைக்கும் என்கிற நிலையில் தனக்கு வாழ்வளித்த பேப்பர் ஏஜென்சியை விற்று அந்தப் பணத்தை கொண்டு போகும்போது கோட்டா இறந்து போகிறார். கருணாஸ் அவரிடம் கொடுத்த பணத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. பணத்தை கேட்டுப்போன இடத்தில் சீனிவாசராவின் மகன் கருணாஸை அடித்து துரத்துகிறான். தனது லட்சியத்துக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை ஒரு நிமிடத்தில் இழந்து நிற்கும் கருணாஸின் அம்பானி கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பது மீதிக் கதை. காமெடி என்ற பெயரில் வெட்டிக்கூத்தடிக்காமல், கருத்து சொல்கிறோம் என்று நோகடிக்காமல் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து இரண்டாவது முறையாக தன்னை மிடில் கிளாஸ் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார் கருணாஸ்.

சைக்கிள், தட்டுவண்டி, எம்80 ஸ்கூட்டரில் தினமும் காணும் அந்த பிசியான மனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கருணாஸ். அதிகாலையில் பேப்பர் போடுவதிலிருந்து நள்ளிரவில் குல்பி ஐஸ் விற்பது வரையிலான அவரது கடின உழைப்பு ஆச்சர்யப்பட வைக்கிறது. அவரது உதவியாளராக வரும் மாஸ்டர் சங்கர், கருணாசுக்கு சரியான பக்க வாத்தியம். கடைசியில் அவனே துரோகம் செய்யும்போது கூட, ‘ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் வாங்கினேன். ஒரே மாதிரி சாப்பாடு வாங்கினேன். ஆனா பணத்தை மட்டும் எனக்குன்னு சேர்த்துக்கிட்டேன். உனக்கும் பணம் தேவைப்படும்னு எனக்கு தோணாமப்போச்சே’ன்னு வருந்தும்போது உருக வைத்து விடுகிறார்.

அழகான பெண் கிடைத்து விட்டாள் என்பதற்காக உருகி உருகி காதலிக்காமல் காதல் அரும்பும் நேரத்தில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்வது நடைமுறை யதார்த்தம். எல்லாவற்றையும் இழந்து, புறப்பட்ட இடத்துக்கே திரும்பி ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்துக் கொண்டு அவர் அடிக்கடி கனவு காணும் ‘தண்டபாணி அண்ட் கோ’ விளம்பரத்தை சொல்லி ‘நேர்மையா உழைக்கிறவன் ஜெயிக்கவே முடியாதா’ என்று தலையிலடித்துக்கொண்டு அழும் காட்சி கல்மனதையும் கலங்கச் செய்துவிடும். லட்சியத்தை வெல்வதற்காக காதலை தள்ளி வைப்பதும், அவருக்கு காதல் உணர்வை வரவழைக்க நவ்னீத்கவுர் போடும் திட்டங்களும் காமெடி ஏரியா. காலையில் எழுந்ததும் ஒற்றைக் காலில் தவமிருந்து, ‘நான் அம்பானியாகணும், அம்பானியாகணும்’ என்று மந்திரத்தை உச்சரிக்க, மறுநாள் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஒத்தக்காலில் தவம் செய்து தங்கள் ஆசையை வெளிப்படுத்தும்போது ஒருவர், ‘நான் சும்மா இருக்கணும்… நான் சும்மா இருக்கணும்’ என்று சொல்வது ஹைலைட் காமெடி.
உழைப்பால் முன்னேறத் துடிக்கும் கருணாஸை, நவ்னீத் கவுர் காதலிப்பது ஆறுதல். ஒரே நாள் இரவில் அவர் நடுத்தெருவுக்கு வந்துவிட, கருணாஸ் இருக்கும் இடம்தேடிச் சென்று உரிமையோடு ஒட்டிக் கொள்வது அழகு. நவ்னித்துக்கு வாழ்க்கை கொடுக்கப்போகிறேன் என்று அவரை ஒருதலையாக
காதலித்துக் கொண்டிருக்கும், லிவிங்ஸ்டனை கொண்டு வந்து நிறுத்தும்போது குபீர் சிரிப்பு.

அண்ணாச்சி கோட்டா சீனிவாசராவும், அவரது மகன் சேரன்ராஜும் அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு கதர் சேலைக்காக கருணாஸின் அம்மா உயிர்விடும் அந்த கிராமத்து பிளாஷ் பேக்கும், வழக்கமான ஒரு கிளைமாக்சை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நெகிழ வைக்கும் அந்த கிளைமாக்சும் பி.ராம்நாத்தை நல்ல இயக்குனராக அடையாளம் காட்டுகிறது. ‘பூ பூக்கும் தருணம்…’ மெலடியும், ‘ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்…’ டப்பாங்குத்தும் கருணாஸை கமர்சியல் இசை அமைப்பாளராக்குகிறது. புலித் தேவனின் ஒளிப்பதிவு காமெடியையும் கதையையும் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறது.

கருணாசின் உழைப்பு, லட்சியம் என்ற நேர்கோட்டில் பயணிக்கும் கதை, நவ்னீத்கவுருக்கு காதல் பிறந்ததும் டிராக் மாறி பயணிக்கிறது.
அப்பாவியாக வரும் மாஸ்டர் சங்கரின் திடீர் வில்லன் அவதாரத்தை ஜீரணிக்க முடிவில்லை. கடைசியாக பத்து லட்சம் ரூபாய் கையிலிருந்தும் எல்லாவற்றையும் இழந்து விட்டதுபோல ரயில் நிலையத்தில் கருணாஸ் கதறுவதில் லாஜிக் இல்லை. இருந்தாலும், அம்பானி ‘நினைத்ததை முடித்தவன்’.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...